திருச்செந்தூர் முருகன் வரலாறு ( மகா சஷ்டி ) Tiruchendur Sri Subramanya Swami History

படைக்கும் கடவுளான பிரம்மாவிற்கு தட்சன், காசிபன் என்ற இரு புதல்வர்கள் உண்டு. இவர்களுள் தட்சன், சிவனை நோக்கி தவம் புரிந்து பல வரங்களைப் பெற்று சிவபிரானுக்கே மாமனாராகியும் அகந்தை காரணமாக இறுதியில் சிவனால் உருவாக்கப்பட்ட வீரபத்திரரால் கொல்லப்பட்டான். (தட்சனே அடுத்த பிறவியில் சூரபத்மனாக பிறந்தான். தட்சனின் மகள் பார்வதி. பார்வதியின் மகன் முருகன். இதன் படி பார்த்தால் முருகனுக்கு சூரபத்மன் தாத்தா உறவு வருகிறது என்ற கருத்தும் உள்ளது.)

அடுத்து காசிபனும் கடும் தவம் புரிந்து சிவனிடம் பல வரங்களைப் பெற்றான். ஒரு நாள் அசுர குரு சுக்கிரனால் ஏவப்பட்ட மாயை எனும் பெண்ணின் அழகில் மயங்கி தான் பெற்ற தவ வலிமையை இழந்தான். இதைத் தொடர்ந்து காசிபனும் மாயை எனும் அசுரப் பெண்ணும் முதலாம் சாமத்தில் மனித உருவத்தில் இணைந்து மனிதத் தலையுடைய சூரபத்மனும், இரண்டாம் சாமத்தில் சிங்க உருவில் இருவரும் இணைந்து சிங்கமுகமுடைய சிங்கனும், மூன்றாம் சாமத்தில் யானை உருவில் இணைந்து யானை முகமுடைய தாரகனும், நான்காம் சாமத்தில் ஆட்டுருவத்தில் இணைந்து ஆட்டுத் தலையுடைய அஜமுகி எனும் அசுரப் பெண்ணும் பிறந்தனர். மாயை காரணமாகத் தோன்றிய இந்த நான்கு பேரும் ஆணவ மிகுதியால் மிதந்தனர்.

காஷ்யபர் தன் பிள்ளைகளிடம், குழந்தைகளே! வடதிசைநோக்கிச் சென்று சிவபெருமானை நோக்கித் தவம் செய்யுங்கள். வேண்டிய வரங்களைப் பெற்று வாழுங்கள்! என்று உபதேசம் செய்தார். இவர்கள் கடும் தவமிருந்து சிவபெருமானிடம் பல வரங்களைப் பெற்றனர்.

இவர்களுள் சூரபத்மன் சிவனை நோக்கி கடும் தவம் புரிந்து 108 யுகம் உயிர் வாழவும் 1008 அண்டம் அரசாளவும் இந்திர ஞாலம் எனும் தேரையும் வரமாக பெற்றான். மேலும் தனக்கு சாகாவரம் வேண்டும் என சூரபத்மன்  சிவனிடம் கேட்டான். பிறந்தவன் மடிந்தே தீர வேண்டும் என்ற சிவன், எந்த வகையில் அவனுக்கு அழிவு வர வேண்டும் எனக் கேட்டார். சூரபத்மன் புத்திசாலித்தனமாக, ஒரு பெண்ணின் வயிற்றில் பிறக்காத பிள்ளையால் தான் தனக்கு அழிவு வர வேண்டும், எனக் கேட்டான். பெண்ணையன்றி வேறு யாரால் ஜீவர்களை உற்பத்தி செய்ய முடியும் என்பது அவனது கணக்கு. இந்த வரத்தைப் பெற்ற சூரபத்மனும் அவனுடன் பிறந்தவர்களும் தன் குலகுருவான சுக்ராச்சாரியரிடம் ஆசி பெற்று தம்மைப் போல் பலரை உருவாக்கி அண்டசராசரங்கள் எல்லாவற்றையும் ஆண்டு இந்திரன் முதலான முப்பத்து முக்கோடி தேவர்களையும் சிறையிலடைத்தனர். இந்திரன் சூரபத்மனுக்கு பயந்து பூலோகம் வந்து ஒளிந்து கொண்டான்.

அசுரர்களின் இந்தக் கொடுமையைத் தாங்க முடியாத தேவர்கள், கயிலாயம் சென்று சிவபெருமானிடம் சூரபத்மனிடம் இருந்து தங்களைக் காக்கும்படி முறையிட்டனர். சிவனும் அவர்களைக் காப்பாற்றும் நோக்குடன் பார்வதியின் தொடர்பின்றி, தனது ஆறு நெற்றிக் கண்களைத் திறக்க (சிவனுக்கு ஈசானம், தத்புருஷம், அகோரம், வாமதேவம், சத்யோஜாதம், ஞானிகளுக்கு மட்டும் தெரியக்கூடிய அதோ முகம் (மனம்) என்று ஆறுமுகங்கள் உண்டு) அவற்றிலிருந்து தோன்றிய ஆறு தீப்பொறிகளையும் வாயு பகவான் ஏந்திச் சென்று சரவணப் பொய்கையில் மலர்ந்திருந்த தாமரை மலர்கள் மீது சேர்த்தான். அந்த தீப்பொறிகள் ஆறும் ஆறு குழந்தைகளாகத் தோன்றின! அந்த ஆறு குழந்தைகளையும் ஆறு கார்த்திகைப் பெண்கள் அறுவர் பாலூட்டி சீராட்டி வளர்த்தனர். இந்த ஆறு திருமுகங்களும் ஞானம், ஐஸ்வர்யம், அழகு, வீரியம், வைராக்கியம், புகழ் எனும் ஆறு குணங்களைக் குறிக்கிறது. பிரணவ சொரூபியான முருகனிடம் காக்கும் கடவுள் முகுந்தன், அழிக்கும் கடவுள் ருத்ரன், படைக்கும் கடவுள் கமலோற்பவன் ஆகிய மும்மூர்த்திகளும் அடங்குவர். மேலும் முருகப் பெருமான் சிவாக்னியில் தோன்றியவராதலால் ஆறுமுகமே சிவம்-சிவமே ஆறுமுகம் என்பதுண்டு. அந்த ஆறு குழந்தைகளையும் பார்வதி கட்டி அணைக்க… அவர்கள் ஒரு மேனியாக வடிவம் கொண்டு ஆறு முகங்களும் இரு கரங்களும் கொண்ட முருகப் பெருமானாகத் தோன்றினர். இத் திருவுருவைப் பெற்றதால் ஆறுமுகசுவாமி என்ற பெயர் முருகப் பெருமானுக்கு ஏற்பட்டது. அத்துடன் இந்த ஆறு குழந்தைகளையும் பார்வதி ஒரே குழந்தையாக ஸ்கந்தம் (சேர்த்தல்) செய்ததால் முருகன் ஸ்கந்தப்பெருமான் ஆனார்.  முருகன் என்றால் அழகன். கோடி மன்மதர்களை விட அழகாக இருந்தான் அவன்.முருகப்பெருமான் தேவகுரு பிரகஸ்பதி மூலம் அசுரர்களின் வரலாற்றினை அறிந்தார். திருக்கரத்தில் வேலேந்திக் கொண்டு முருகப்பெருமான், இந்திராதி தேவர்களே! நீங்கள் அசுரர்களுக்குச் சிறிதும் அஞ்சத்தேவையில்லை. அஞ்சும் முகம் தோன்றும் போது இந்த ஆறுமுகத்தை எண்ணுங்கள். உங்கள் குறைகளை சீக்கிரமே போக்கி அருள்செய்வது என் வேலை, என்றார். அசுரர்களை அழிக்க நினைத்த முருகன் முதலில்  சிங்கமுகன், தாரகாசுரன், அவன் மகன் என எல்லா சேனைகளையும் ஐந்து நாட்களில் அழித்தார். ஆறாம் நாள் எஞ்சியவன் சூரபத்மன்தான்.

தனது சேனைத்தலைவரான வீரபாகுவை சூரபத்மனிடம் தூது அனுப்பி அவனைத் திருந்தும்படி எச்சரித்தார். ஆனால், சூரபத்மன், பாலகன் முருகனா எனக்கு எதிரி! யார் வந்தாலும் இந்திராதி தேவர்களைக் காக்க யாராலும் முடியாது, என்று வீராவேசமாகக் கூறினான். உடனே பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளும் முருகப் பெருமானை சூரனுடன் போர் புரிய அனுப்பினர். சூரனோ, கடலின் நடுவில் வீரமகேந்திரபுரி என்ற பட்டணத்தை எழுப்பி அங்கே வசித்து வந்தான். அங்கே செல்வது அவ்வளவு எளிதல்ல. ஆனால், உலகாள வந்த முருகனுக்கு இது சாதாரண விஷயம். அவர் அந்த நகரை அடைந்தார். சூரன் அவரைப் பார்த்து ஏளனம் செய்தான். ஏ சிறுவனே! நீயா என்னைக் கொல்ல வந்தாய். பச்சை பிள்ளையப்பா நீ! உன்னைப் பார்த்தாலே பரிதாபமாக இருக்கிறது. பாலகா! இங்கே நிற்காதே, ஓடி விடு, என்று பரிகாசம் செய்தான். முருகன் அசரவில்லை. தன் உருவத்தைப் பெரிதாக்கி அவரைப் பயமுறுத்தினான். அதன் மீது சக்தி வாய்ந்த ஏழு பாணங்களை எய்தார் முருகன். உடனே அவன் மகாசமுத்திரமாக உருமாறினான். மிகப்பெரிய அலைகளுடன் முருகனைப் பயமுறுத்திப் பார்த்தான். உடனே நூறு அக்னி அம்புகளை கடல் மீது ஏவினார் முருகன். கடல் பயந்து பின் வாங்கியது. இருப்பினும், முருகனைக் கொல்ல வேண்டும் என்ற எண்ணம் சூரனுக்கு வரவில்லை. காரணம், ஒரு சிறுவனைக் கொல்வது தன் வீரத்துக்கு இழுக்கு என்றும், அது பாவமென்றும் அவன் கருதினான். அந்தக் கல்லுக்குள்ளும் இருந்த ஈரத்தைக் கண்டு தான், கருணாமூர்த்தியான முருகனும் அவனைக் கொல்லாமல் ஆட்கொள்ள முடிவெடுத்தார். தன் விஸ்வரூபத்தை அவனுக்குக் காட்டினார். அதைப் பார்த்தவுடனேயே சூரனின் ஆணவம் மறைந்து ஞானம் பிறந்தது. முருகா! என் ஆணவம் மறைந்தது. தெய்வமான உன் கையால் மடிவதை நான் பாக்கியமாகக் கருதுகிறேன். உன்னை பயமுறுத்த கடலாய் மாறினேன். அந்தக் கடலின் வடிவாகவே நான் இங்கு தங்குகிறேன். உன்னை வணங்க வரும் பக்தர்கள் என்னில் நீராடியதுமே, ஆணவம் நீங்கி, உன் திருவடியே கதி என சரணமடையும் புத்தியைப் பெற வேண்டும், என்றான். முருகனும் அந்த வரத்தை அவனுக்கு அளித்தார். அதன் பிறகு, தன் ரூபத்தை சுருக்கி, சூரனுக்கு ஞாபகமறதியை உண்டாக்கினார். சூரனுக்கு ஆணவம் தலை தூக்கவே அவன் மாமரமாக மாறி அவரிடமிருந்து தப்ப முயன்றான்.

முருகப்பெருமான் தன் தாய் உமாதேவியிடம் ஆசிபெற்று வாங்கிய வேலாயுதத்தை மாமரத்தின் மீது விடுத்தார். (நாகப்பட்டினம் மாவட்டம் சிக்கல் தலத்தில்தான் முருகப் பெருமான் தன் தாயிடம் வேலைப் பெற்றார். சிக்கலில் வேல் வாங்கி செந்தூரில் சூரசம்ஹாரம் என்பர்.  சஷ்டியின் ஐந்தாம் நாள் விழாவன்று, வேல் வாங்கும் உற்சவ முருகனுக்கு முகமெங்கும் வியர்வைத் துளிகள் அரும்பும் அதிசயத்தை ஆண்டுதோறும் காணலாம்.)வேல் பட்டதும் மாமரம் இரண்டாகப் பிளந்தது. அதன் ஒருபாதியை மயிலாகவும், மறுபாதியை சேவலாகவும் மாற்றிய முருகன் தனது வாகனமாகவும், கொடிச்சின்னமாகவும் ஆக்கினார். சூரன் மாமரமான இடம் மாம்பாடு எனப்படுகிறது. இன்றும் இங்கு மாமரம் தழைப்பதில்லை. பகைவனுக்கும் அருளும்பரமகாருண்ய மூர்த்தி யான அவர், சூரனை வதம் செய்யாமல் அவனை ஆட்கொண்டார். இச்செயலால்வைதாரையும் வாழவைப்பவன் என்ற சிறப்புப் பெயர் பெற்றார். சூரசம்ஹாரம் முடிந்தபின் முருகன் சிவபூஜை செய்ய விரும்பினான். அதற்காகக் கடற்கரையில் கட்டப்பட்ட கோவில்தான் திருச் செந்தூர் கோவில். இங்கு மூல ஸ்தானத்தின் பின்பகுதியில் முருகன் பூஜை செய்த சிவலிங்கத்தைக் காணலாம். சூரசம்ஹாரத்தோடு விழா முடிவதில்லை. தேவர்களுக்கு முருகன் செய்த உதவிக்கு கைம் மாறாக, இந்திரன் தன் மகள் தெய்வானையை முருகனுக்கு மணம் முடித்து வைத்தான். எனவே மறுநாள் முருகன்- தெய்வானை திருமண வைபவத்தோடுதான் விழா நிறைவு பெறுகிறது.

கிருத்திகை என்றால் திருத்தணி. (இங்கு மட்டும் சூரசம்ஹார விழா நடைபெறாது). தைப்பூசம் என்றால் பழனி. கந்தசஷ்டி என்றால் திருச்செந்தூர். வேல் என்றால் கொல்லும் ஆயுதமல்ல. அது ஆணவத்தை அழித்து நற்கதி தரும் பரமானந்தமான வழிபாட்டுப் பொருள். அதனால் தான், வேல் வேல் வெற்றி வேல் என்று முழங்குகிறார்கள் பக்தர்கள். அந்த வேல் பிறவித்துன்பத்தை அழித்து, முருகனின் திருவடியில் நிரந்தரமாக வசிக்கும் முக்தி இன்பத்தைத் தரக்கூடியது. சூரசம்ஹாரம் கந்தனால் ஐப்பசி சஷ்டி திதியில் நிகழ்த்தப்பட்டதால் இது கந்தசஷ்டி ஆயிற்று. முருகப் பெருமான் அசுரர்களான சூரபத்மன் மற்றும் அவனது தம்பியரை அழிக்கப் போர் புரிந்த திருவிளையாடலையே நாம் கந்த சஷ்டி விழாவாகக் கொண்டாடி மகிழ்கிறோம். கந்தசஷ்டி திருநாளில் சக்திவேலுடன் கூடிய முருகப்பெருமானை வணங்கி நற்கதி பெறுவோம்

கண்ணாடிக்கு அபிஷேகம்
ஜெயந்திநாதர், சூரனை சம்ஹாரம் செய்தபின்பு பிரகாரத்திலுள்ள மகாதேவர் சன்னதிக்கு எழுந்தருளுவார். அப்போது சுவாமியின் எதிரே ஒரு கண்ணாடி வைக்கப்படும். அர்ச்சகர், கண்ணாடியில் தெரியும் ஜெயந்திநாதரின் பிம்பத்திற்கு அபிஷேகம் செய்வார். இதை சாயாபிஷேகம் என்பர். “சாயா’ என்றால் “நிழல்’ எனப்பொருள். போரில் வெற்றி பெற்ற முருகனை குளிர்விக்கும் விதமாக இந்த அபிஷேகம் நடக்கும். இதை, முருகப்பெருமானே, கண்ணாடியில் கண்டு மகிழ்வதாக ஐதீகம். இந்நிகழ்ச்சிக்குப்பின்பு, முருகன் சன்னதிக்கு திரும்புவார். குத்துடன் சூரசம்ஹார வைபவம் நிறைவடையும்.

தெய்வயானை திருமணம்

சூரசம்ஹாரம் முடிந்த மறுநாள் (ஏழாவது நாள்) முருகன், தெய்வானை திருக்கல்யாணம் நடக்கிறது. அசுரனை எதிர்த்து வெற்றி பெற்றதற்காக இந்திரன், தெய்வானையை முருகனுக்கு திருமணம் செய்து தந்ததோடு தேவ மயிலாகவும் மாறி சேவை செய்தார். இவர்களது திருமணம் முதல் படைவீடான திருப்பரங்குன்றத்தில் நடந்தது.

சூரனை ஆட்கொண்ட தலம் என்பதால் திருச்செந்தூரில் கந்தசஷ்டிக்கு மறுநாள் முருகன், தெய்வானை திருக்கல்யாணம் நடக்கிறது. அன்று காலையில் தெய்வானை தபசு மண்டபம் சென்று, முருகனை மணந்து கொள்ள வேண்டி தவமிருப்பாள்.

மாலையில் குமரவிடங்கர் (முருகனின் ஒரு உற்சவர் வடிவம்), முருகனின் பிரதிநிதியாக மயில் வாகனத்தில் தபசு மண்டபம் சென்று தெய்வானைக்கு மாலை சூட்டி நிச்சயதார்த்தம் செய்து கொள்கிறார். நள்ளிரவில் இருவரும் திருக்கல்யாண மண்டபத்திற்கு எழுந்தருள, அங்கு திருமணம் நடக்கும். மறுநாள் சுவாமி, தெய்வானையுடன் வீதியுலா செல்கிறார். அடுத்த மூன்று நாட்களும் சுவாமி திருக்கல்யாண மண்டபத்தில் ஊஞ்சலில் காட்சி தருவார்

மும்மூர்த்தி முருகன்
ஆவணி மற்றும் மாசி மாத திருவிழாவின்போது சிவன், விஷ்ணு, பிரம்மா என மும்மூர்த்திகளின் அம்சமாக காட்சி தருகிறார். விழாவின் 7ம் நாளன்று மாலையில் இவர் சிவப்பு நிற வஸ்திரம் சாத்தி சிவபெருமானாக காட்சி தருகிறார். மறுநாள் (8ம் நாள்) அதிகாலையில் இவர் வெண்ணிற ஆடையில் பிரம்மாவின் அம்சமாக அருளுவார். மதிய வேளையில் பச்சை வஸ்திரம் சாத்தி பெருமாள் அம்சத்தில் காட்சியளிக்கிறார்.

அருள்மிகு பாம்பன் சுவாமிகள் வரலாறு (Pamban Swamigal History) Part 1

ஓம் குமரகுருதாசாய நமோ நமக.

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப் படும்

என்ற தெய்வப்புலவர் திருவள்ளுவரின் வாக்குப்படி, ஆழி சூழ் இவ்வையகத்தில், இச்சைகளைத் துறந்து, உலகில் வாழும் உயிர்களின் நன்மைக்காகவே தன் வாழ்நாளை அர்ப்பணித்த தியாக சீலர்கள் எண்ணற்றோர் நம் தமிழ்நாட்டில் உண்டு. இல்லற வாழ்க்கையில் ஈடுபட்டி ருந்தாலும், ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில், இறைவனின் எண்ணப்படி துறவறத்தை மேற்கொண்டு, ” எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதேயன்றி வேறொன்றும் அறியோம் பராபரமே” என்ற திருவாக்கினை தாரக மந்திரமாகக் கொண்டு, உலக மாந்தருள் ஒருவராக வாழ்ந்தாலும், தனக்கென்று தனிப்பட்ட வாழ்வாங்கு வாழ்க்கை நடத்தி, மக்கள் மனதில் வானுறையும் தெய்வமாக வாழும் சிலருள், ஒருவர் தான் “பாம்பன் குமரகுருதாச சுவாமிகள்”. அன்னாரின் வாழ்க்கை வரலாற்றைச் சுருக்கமாகக் காணலாம்.

சைவ மதம் தழைத்தோங்கிய பதினெட்டாம் நூற்றாண்டின் இடைப்பட்ட காலத்தில் தோன்றிய பாம்பன் சுவாமிகள், தமிழ்க்கடவுள் முருகன் மேல் கொண்ட ஆழ்ந்த பக்தியினால், தமிழ் மொழியில் பல பக்தி நூல்களை இயற்றி பக்தி கமழச் செய்தார். தமிழ் நாட்டின் தென்கோடியில் அமைந்துள்ள “இராமேஸ்வரம்” என்ற ஊரில், சாத்தப்பபிள்ளை – செங்கமலத்தம்மாள் தம்பதியினருக்கு, திருமகனாக அவதரித்தார் பாம்பன் சுவாமிகள். சுவாமிகளுக்கு பெற்றோர் இட்ட பெயர் “அப்பாவு”, பிறந்த ஆண்டு உறுதியாக அறியப்பட வில்லை. இருப்பினும் கி.பி 1848-1850 என்ற ஆண்டிற்கு இடையில் இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

சிறு வயதிலேயே தமிழ் மொழியில் மிகுந்த ஞானத்துடன் திகழ்ந்த சுவாமிகள், தெய்வத் திருமுருகன் பால் அளவிடற்கரிய பக்தி கொண்டவர். கனவிலும் நனவிலும் ஆறுமுகப் பெருமானையே தரிசித்தவர். நாள்தோறும் கந்த சஷ்டிக்கவசத்தை பாராயணம் செய்து இறைவழிபாடு செய்த சுவாமிகள் மனதில், தாமும் அதுபோல், ஆறுமுகக்கடவுள் மீது தமிழ்ப்பாடல்கள் என்ற எண்ணம் ஏற்பட்டது. தினமும் உணவு உண்பதற்கு முன் ஒரு பாடல் என்ற முறையில் நூறு பாடல்களை இயற்றினார். அப்போது சுவாமிகளுக்கு அகவை 12 அல்லது 13 இருக்கலாம். மிகச் சிறு வயதிலேயே முருகக்கடவுள் மீது அளவு கடந்த பக்தி கொண்டு பாடல் இயற்றும் சிறுவன் அப்பாவுவின் திறமையைப் புரிந்து கொண்ட, சுவாமிகளின் குடும்ப நண்பர் சேதுமாதவ ஐயர், விஜய தசமி நன்னாளில் இராமேஸ்வரத்தில் உள்ள அக்னி தீர்த்தத்தில் புனித நீராட வைத்து, சுப்ரமணியக் கடவுளின் சடச்சர மந்திரத்தை குருஉபதேசம் செய்து வைத்தார்.

இறைவழிபாட்டுடன் இரண்டறக் கலந்து இருந்தாலும், பக்தி மணம் கமழ பல கவிகள் இயற்றினாலும், சுவாமிகள் தன் வாலிப வயதில், மல்யுத்தம், வில்வித்தை போன்ற வீரக்கலைகளையும் கற்றுக் கொண்டார். வாலிப வயதை கடந்து திருமண வயது வந்த பின்னரும் கூட, தெய்வீகத் தன்மையே தன் மனதில் மேலோங்கி இருந்ததால், சுவாமிகளுக்கு திருமணம் செய்ய வேண்டும் ன்ற எண்ணம் ஏற்படவில்லை. இருப்பினும் பெற்றோர்களின் ஆசையினாலும், தனக்கு குருவுபதேசம் செய்து வைத்த சேதுமாதவ ஐயரின் வற்புறுத்துததினாலும், “காளிமுத்தம்மாள்” என்ற மங்கையைத் திருமணம் செய்து கொண்டு இல்லற வாழ்க்கையில் ஈடுபட்டார். அதன் பயனாக, இறைவன் திருவருளால் முருகாண்டிப் பிள்ளை, குமரகுருதாசபிள்ளை என்ற இரு ஆண் மக்களும், சிவஞானம்மாள் என்ற ஒரு பெண்ணுமாக மூன்று குழந்தைகள் பிறந்தன.

இல்லற வாழ்க்கையில் ஈடுபட்டு, பிள்ளைச் செல்வங்களைப் பெற்றாலும், இறைபக்தி மேலீட்டால் பாம்பன் சுவாமிகள் ஒரு துறவி போலவே தன் வாழ்க்கையை நடத்தி வந்தார்.

ஒருமுறை, துறவறம் மேற்கொண்டு, பழனிக்குச் சென்றுப் பழனி ஆண்வரைத் தரிசிக்க வேண்டும் என்ற எண்ணம் சுவாமிகள் மனதில் உதித்தது. தனது உள்ளக்கிடக்கையை தனது உற்ற நண்பர் அங்கமுத்து பிள்ளையிடம் கூறினார். அங்க முத்து பிள்ளையோ, சுவாமிகளின் குடும்ப வாழ்க்கையையும், அவருடைய மூன்று பிள்ளைகளின் எதிர்காலத்தை மனதில் கொண்டும், தற்சமயம் வேண்டாம் என்று சுவாமிகளைத் தடுத்தார். சுவாமிகள் மீண்டும் கூற, ” இது பழனி முருகக் கடவுளின் ஆணையா?” என்ற கேள்வி எழுப்பினார். சுவாமிகளோ ஆம் என்பதற்கிணங்க தன் தலை அசைத்து பதில் கூறினார்.

அன்று மாலை நேரத்தில் சுவாமிகள் தனது வீட்டின் மாடியில் அமர்ந்திருந்தார். அப்போது தென்திசையில் கோபக்கனலாக இறைவனின் உருவம் தென்பட்டது. கருணைக் கடலான முருகப்பெருமான் கோபக்கனலாக தன் முன் காட்சி கொடுப்பதைக் கண்ட பாம்பன் சுவாமிகள் கண்களில் நீர் வழிய, நாத் தழுதழுக்க , மனங்குன்றி கை கூப்பியபடி நின்றார். ” பழனிக்கு வருமாறு உனக்கு ஆணையிட்டேனா?” என்ற குரல் அவரது செவிகளில் ஓங்கி ஒலித்தது. “அளவற்ற பக்தியினாலும், ஆன்ம லாபத்தை அடைய வேண்டும் என்ற ஆசையினாலும் அவ்வாறு கூறினேன்”, என்று சுவாமிகள் பதிலுறைத்தார்.

“பழனிக்கு நீர் எப்போது வரவேண்டும் என்று எமக்குத் தெரியாதா?, அந்த ஆன்ம லாபத்தை உமக்கு யாம் அளிக்க மாட்டோமா? எம் உத்தரவின்றி நீர் போய் புகன்றதால், எம்மிடமிருந்து அழைப்பு வரும்வரை நீர் பழனிக்கு வருவதில்லை என்று எமக்கு சத்தியம் செய்யும்” என்ற இறைவனின் குரல் செவிகளில் ஒலித்தது. பாம்பன் சுவாமிகள் திக்கற்று நின்றார். இறைவுருவம் மறைந்தது. இதன் பிறகு சுவாமிகளின் வாழ்நாள் முற்றிலும் பழனித் தண்டபாணித் தெய்வத்திடமிருந்து, பழனியம் பதிக்கு வருமாறு அழைப்பு வரவே இல்லை. இதானால் சுவாமிகளும் பழனிக்குச் செல்ல முடியாமல் போயிற்று. தாம் இயற்றிய பழனிமலைப் பதிகத்தில், ” என்று என்னைப் பழனிக்கு அழைப்பாயோ” என்று பொருள்படும்படி பத்து பாடல்களை இயற்றியுள்ளார். பாம்பன் சுவாமிகள் வாழ்க்கையில் இறைவன் முருகன் நடத்திய திருவிளையாடல்களில் இதுவும் ஒன்று.

இதற்கிடையில் சுவாமிகளின் தந்தையார் சாத்தப்பபிள்ளை சிவபதம் அடைந்தார். இதனால் குடும்பப் பொறுப்புகளை சுவாமிகளே ஏற்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. தக்க வயதில் தன் பிள்ளைகளுக்கு திருமணம் செய்து வைத்து, ஒரு பொறுப்புள்ள தந்தையாக கடமை ஆற்றினார். இல்லற வாழ்க்கையில் இருந்து கொண்டு, மிகுந்த தெய்வபக்தி சிந்தனையோடு வாழ்ந்து வந்தாலும், துறவறம் மேற்கொள்ள வேண்டும் என்ற சிந்தனையே சுவாமிகள் மனதில் மேலோங்கியது. தம் அன்றாட வாழ்க்கையில் ஏற்படும் இன்னல்களை நீங்கும் பொருட்டு “சண்முகக் கவசம்” என்ற பாடற் திரட்டை இயற்றினார். இந்நூல் தமிழ் மொழியின் முதல் எழுத்தான ‘அ’ கரம் ( அ என்னும் உயிர் எழுத்து) முதலாய் ‘ன’கரம் (ன என்னும் மெய்யெழுத்து) இறுவாயாக அமைப்பைக் கொண்டது. கந்த சஷ்டிக் கவசத்தைப் போன்று சண்முகக் கவசமும் மிகவும் சக்தி வாய்ந்த நூலாகும்.

சில காலம் கழித்து ” பரிபூரண பஞ்சாமிர்த வண்ணம் ” என்ற செய்யுள் நூலையும் பாடியருளினார்.

சுவாமிகளுக்கு தமிழ்நாட்டின் பல திருத்தலங்களைக் காண வேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டது. எனவே தனது சொந்த ஊரான பாம்பனிலிருந்து புறப்பட்டு, மதுரை, திருவண்ணாமலை, திருக்காளத்தி, திருத்தணி என்ற பல திருத்தலங்களைத் தரிசனம் செய்து விட்டு காஞ்சிபுரம் வந்து சேர்ந்தார். அங்கும் பல திருக்கோயில்களைக் கண் குளிரக் கண்டு, தெய்வ கடாட்சத்துடன் பாம்பன் வந்து சேர்ந்தார்.

சுவாமிகள் முருகப் பெருமானை நேரில் கண்டு உபதேசம் பெற வேண்டும் என்ற பேராவலால், பாம்பனுக்கு அருகில் உள்ள பிரப்பன்வலசை எனும் ஊரை அடைந்தார். அங்குள்ள மயான பூமியில் ஒரு சதுரக் குழி வெட்டச் செய்து, அதைச் சுற்றி முள்வேலி அமைக்கச் சொன்னார். பின்னர் அக்குழியில் இறங்கி தியான யோகத்தில் ஈடுபட்டார். முதல் ஐந்து நாட்கள் பல இன்னல்கள் ஏற்பட்டன. இறைவனின் சடச்சர மந்திரத்தின் துணையால் இன்னல்கள் களைந்தது. ஏழாம் நாள் இறைவன் முருகப் பெருமான், அகஸ்தியர், அருணகிரிநாதர் ஆகிய இருவரும் சூழ, பழனி தண்டாயுதபாணியாய் சுவாமிகளுக்கு காட்சி கொடுத்து, குருவுபதேசம் செய்து வைத்தார். தொடர்ந்து சுவாமிகள் தவத்தினை மேற்கொண்டார். முப்பத்தைந்தாம் நாள் ” தவயோகத்தில் இருந்து எழுக” என்ற குரல் கேட்டது. என் இறைவன் முருகப்பெருமான் கட்டளை இட்டால் மட்டுமே தவத்தில் இருந்து எழுவேன் என்று உறுதியாகக் கூறினார். “இறைவன் முருகன் கட்டளைதான், எழுக” என்று மீண்டும் குரல் கேட்டது. மகிழ்ச்சி அடைந்த சுவாமிகள், தவக்குழியிலிருந்து எழுந்து, அக்குழியை மூன்று முறை வலம் வந்து, இறைவனுக்கு பல பூஜை முறைகளை செய்யத் தொடங்கினார். அன்று சித்திரை மாதம் பெளர்ணமி நாள் ஆகும். பாம்பன் சுவாமிகள் தனது தியான யோகத்தை நிறைவேற்றி, இறைவனை வழிபட்ட அந்நன்னாளே சிறப்பிற்குரிய நாளாக கருதப்பட்டு, இன்று வரை தொடர்ந்து கொண்டாடப் படுகிறது. மகான்களுக்கும், சித்தர்களுக்கும் சிறப்பிற்குரிய நாளாக ” சித்திரை மாதம், பெளர்ணமி நாள்” காலங்காலமாக கருதப்பட்டு கொண்டாடப்படுகிறது. அவ்வழக்கமே இன்று வரை தொடர்கிறது. (மேலும் ………..)

ஓம் குமரகுருதாசாய நமோ நமக