அருள்மிகு பாம்பன் சுவாமிகள் வரலாறு (Pamban Swamigal History) Part 1

10361994_1453919884861990_4102811327489185386_n

ஓம் குமரகுருதாசாய நமோ நமக.

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப் படும்

என்ற தெய்வப்புலவர் திருவள்ளுவரின் வாக்குப்படி, ஆழி சூழ் இவ்வையகத்தில், இச்சைகளைத் துறந்து, உலகில் வாழும் உயிர்களின் நன்மைக்காகவே தன் வாழ்நாளை அர்ப்பணித்த தியாக சீலர்கள் எண்ணற்றோர் நம் தமிழ்நாட்டில் உண்டு. இல்லற வாழ்க்கையில் ஈடுபட்டி ருந்தாலும், ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில், இறைவனின் எண்ணப்படி துறவறத்தை மேற்கொண்டு, ” எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதேயன்றி வேறொன்றும் அறியோம் பராபரமே” என்ற திருவாக்கினை தாரக மந்திரமாகக் கொண்டு, உலக மாந்தருள் ஒருவராக வாழ்ந்தாலும், தனக்கென்று தனிப்பட்ட வாழ்வாங்கு வாழ்க்கை நடத்தி, மக்கள் மனதில் வானுறையும் தெய்வமாக வாழும் சிலருள், ஒருவர் தான் “பாம்பன் குமரகுருதாச சுவாமிகள்”. அன்னாரின் வாழ்க்கை வரலாற்றைச் சுருக்கமாகக் காணலாம்.

சைவ மதம் தழைத்தோங்கிய பதினெட்டாம் நூற்றாண்டின் இடைப்பட்ட காலத்தில் தோன்றிய பாம்பன் சுவாமிகள், தமிழ்க்கடவுள் முருகன் மேல் கொண்ட ஆழ்ந்த பக்தியினால், தமிழ் மொழியில் பல பக்தி நூல்களை இயற்றி பக்தி கமழச் செய்தார். தமிழ் நாட்டின் தென்கோடியில் அமைந்துள்ள “இராமேஸ்வரம்” என்ற ஊரில், சாத்தப்பபிள்ளை – செங்கமலத்தம்மாள் தம்பதியினருக்கு, திருமகனாக அவதரித்தார் பாம்பன் சுவாமிகள். சுவாமிகளுக்கு பெற்றோர் இட்ட பெயர் “அப்பாவு”, பிறந்த ஆண்டு உறுதியாக அறியப்பட வில்லை. இருப்பினும் கி.பி 1848-1850 என்ற ஆண்டிற்கு இடையில் இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

சிறு வயதிலேயே தமிழ் மொழியில் மிகுந்த ஞானத்துடன் திகழ்ந்த சுவாமிகள், தெய்வத் திருமுருகன் பால் அளவிடற்கரிய பக்தி கொண்டவர். கனவிலும் நனவிலும் ஆறுமுகப் பெருமானையே தரிசித்தவர். நாள்தோறும் கந்த சஷ்டிக்கவசத்தை பாராயணம் செய்து இறைவழிபாடு செய்த சுவாமிகள் மனதில், தாமும் அதுபோல், ஆறுமுகக்கடவுள் மீது தமிழ்ப்பாடல்கள் என்ற எண்ணம் ஏற்பட்டது. தினமும் உணவு உண்பதற்கு முன் ஒரு பாடல் என்ற முறையில் நூறு பாடல்களை இயற்றினார். அப்போது சுவாமிகளுக்கு அகவை 12 அல்லது 13 இருக்கலாம். மிகச் சிறு வயதிலேயே முருகக்கடவுள் மீது அளவு கடந்த பக்தி கொண்டு பாடல் இயற்றும் சிறுவன் அப்பாவுவின் திறமையைப் புரிந்து கொண்ட, சுவாமிகளின் குடும்ப நண்பர் சேதுமாதவ ஐயர், விஜய தசமி நன்னாளில் இராமேஸ்வரத்தில் உள்ள அக்னி தீர்த்தத்தில் புனித நீராட வைத்து, சுப்ரமணியக் கடவுளின் சடச்சர மந்திரத்தை குருஉபதேசம் செய்து வைத்தார்.

இறைவழிபாட்டுடன் இரண்டறக் கலந்து இருந்தாலும், பக்தி மணம் கமழ பல கவிகள் இயற்றினாலும், சுவாமிகள் தன் வாலிப வயதில், மல்யுத்தம், வில்வித்தை போன்ற வீரக்கலைகளையும் கற்றுக் கொண்டார். வாலிப வயதை கடந்து திருமண வயது வந்த பின்னரும் கூட, தெய்வீகத் தன்மையே தன் மனதில் மேலோங்கி இருந்ததால், சுவாமிகளுக்கு திருமணம் செய்ய வேண்டும் ன்ற எண்ணம் ஏற்படவில்லை. இருப்பினும் பெற்றோர்களின் ஆசையினாலும், தனக்கு குருவுபதேசம் செய்து வைத்த சேதுமாதவ ஐயரின் வற்புறுத்துததினாலும், “காளிமுத்தம்மாள்” என்ற மங்கையைத் திருமணம் செய்து கொண்டு இல்லற வாழ்க்கையில் ஈடுபட்டார். அதன் பயனாக, இறைவன் திருவருளால் முருகாண்டிப் பிள்ளை, குமரகுருதாசபிள்ளை என்ற இரு ஆண் மக்களும், சிவஞானம்மாள் என்ற ஒரு பெண்ணுமாக மூன்று குழந்தைகள் பிறந்தன.

இல்லற வாழ்க்கையில் ஈடுபட்டு, பிள்ளைச் செல்வங்களைப் பெற்றாலும், இறைபக்தி மேலீட்டால் பாம்பன் சுவாமிகள் ஒரு துறவி போலவே தன் வாழ்க்கையை நடத்தி வந்தார்.

ஒருமுறை, துறவறம் மேற்கொண்டு, பழனிக்குச் சென்றுப் பழனி ஆண்வரைத் தரிசிக்க வேண்டும் என்ற எண்ணம் சுவாமிகள் மனதில் உதித்தது. தனது உள்ளக்கிடக்கையை தனது உற்ற நண்பர் அங்கமுத்து பிள்ளையிடம் கூறினார். அங்க முத்து பிள்ளையோ, சுவாமிகளின் குடும்ப வாழ்க்கையையும், அவருடைய மூன்று பிள்ளைகளின் எதிர்காலத்தை மனதில் கொண்டும், தற்சமயம் வேண்டாம் என்று சுவாமிகளைத் தடுத்தார். சுவாமிகள் மீண்டும் கூற, ” இது பழனி முருகக் கடவுளின் ஆணையா?” என்ற கேள்வி எழுப்பினார். சுவாமிகளோ ஆம் என்பதற்கிணங்க தன் தலை அசைத்து பதில் கூறினார்.

அன்று மாலை நேரத்தில் சுவாமிகள் தனது வீட்டின் மாடியில் அமர்ந்திருந்தார். அப்போது தென்திசையில் கோபக்கனலாக இறைவனின் உருவம் தென்பட்டது. கருணைக் கடலான முருகப்பெருமான் கோபக்கனலாக தன் முன் காட்சி கொடுப்பதைக் கண்ட பாம்பன் சுவாமிகள் கண்களில் நீர் வழிய, நாத் தழுதழுக்க , மனங்குன்றி கை கூப்பியபடி நின்றார். ” பழனிக்கு வருமாறு உனக்கு ஆணையிட்டேனா?” என்ற குரல் அவரது செவிகளில் ஓங்கி ஒலித்தது. “அளவற்ற பக்தியினாலும், ஆன்ம லாபத்தை அடைய வேண்டும் என்ற ஆசையினாலும் அவ்வாறு கூறினேன்”, என்று சுவாமிகள் பதிலுறைத்தார்.

“பழனிக்கு நீர் எப்போது வரவேண்டும் என்று எமக்குத் தெரியாதா?, அந்த ஆன்ம லாபத்தை உமக்கு யாம் அளிக்க மாட்டோமா? எம் உத்தரவின்றி நீர் போய் புகன்றதால், எம்மிடமிருந்து அழைப்பு வரும்வரை நீர் பழனிக்கு வருவதில்லை என்று எமக்கு சத்தியம் செய்யும்” என்ற இறைவனின் குரல் செவிகளில் ஒலித்தது. பாம்பன் சுவாமிகள் திக்கற்று நின்றார். இறைவுருவம் மறைந்தது. இதன் பிறகு சுவாமிகளின் வாழ்நாள் முற்றிலும் பழனித் தண்டபாணித் தெய்வத்திடமிருந்து, பழனியம் பதிக்கு வருமாறு அழைப்பு வரவே இல்லை. இதானால் சுவாமிகளும் பழனிக்குச் செல்ல முடியாமல் போயிற்று. தாம் இயற்றிய பழனிமலைப் பதிகத்தில், ” என்று என்னைப் பழனிக்கு அழைப்பாயோ” என்று பொருள்படும்படி பத்து பாடல்களை இயற்றியுள்ளார். பாம்பன் சுவாமிகள் வாழ்க்கையில் இறைவன் முருகன் நடத்திய திருவிளையாடல்களில் இதுவும் ஒன்று.

இதற்கிடையில் சுவாமிகளின் தந்தையார் சாத்தப்பபிள்ளை சிவபதம் அடைந்தார். இதனால் குடும்பப் பொறுப்புகளை சுவாமிகளே ஏற்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. தக்க வயதில் தன் பிள்ளைகளுக்கு திருமணம் செய்து வைத்து, ஒரு பொறுப்புள்ள தந்தையாக கடமை ஆற்றினார். இல்லற வாழ்க்கையில் இருந்து கொண்டு, மிகுந்த தெய்வபக்தி சிந்தனையோடு வாழ்ந்து வந்தாலும், துறவறம் மேற்கொள்ள வேண்டும் என்ற சிந்தனையே சுவாமிகள் மனதில் மேலோங்கியது. தம் அன்றாட வாழ்க்கையில் ஏற்படும் இன்னல்களை நீங்கும் பொருட்டு “சண்முகக் கவசம்” என்ற பாடற் திரட்டை இயற்றினார். இந்நூல் தமிழ் மொழியின் முதல் எழுத்தான ‘அ’ கரம் ( அ என்னும் உயிர் எழுத்து) முதலாய் ‘ன’கரம் (ன என்னும் மெய்யெழுத்து) இறுவாயாக அமைப்பைக் கொண்டது. கந்த சஷ்டிக் கவசத்தைப் போன்று சண்முகக் கவசமும் மிகவும் சக்தி வாய்ந்த நூலாகும்.

சில காலம் கழித்து ” பரிபூரண பஞ்சாமிர்த வண்ணம் ” என்ற செய்யுள் நூலையும் பாடியருளினார்.

சுவாமிகளுக்கு தமிழ்நாட்டின் பல திருத்தலங்களைக் காண வேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டது. எனவே தனது சொந்த ஊரான பாம்பனிலிருந்து புறப்பட்டு, மதுரை, திருவண்ணாமலை, திருக்காளத்தி, திருத்தணி என்ற பல திருத்தலங்களைத் தரிசனம் செய்து விட்டு காஞ்சிபுரம் வந்து சேர்ந்தார். அங்கும் பல திருக்கோயில்களைக் கண் குளிரக் கண்டு, தெய்வ கடாட்சத்துடன் பாம்பன் வந்து சேர்ந்தார்.

சுவாமிகள் முருகப் பெருமானை நேரில் கண்டு உபதேசம் பெற வேண்டும் என்ற பேராவலால், பாம்பனுக்கு அருகில் உள்ள பிரப்பன்வலசை எனும் ஊரை அடைந்தார். அங்குள்ள மயான பூமியில் ஒரு சதுரக் குழி வெட்டச் செய்து, அதைச் சுற்றி முள்வேலி அமைக்கச் சொன்னார். பின்னர் அக்குழியில் இறங்கி தியான யோகத்தில் ஈடுபட்டார். முதல் ஐந்து நாட்கள் பல இன்னல்கள் ஏற்பட்டன. இறைவனின் சடச்சர மந்திரத்தின் துணையால் இன்னல்கள் களைந்தது. ஏழாம் நாள் இறைவன் முருகப் பெருமான், அகஸ்தியர், அருணகிரிநாதர் ஆகிய இருவரும் சூழ, பழனி தண்டாயுதபாணியாய் சுவாமிகளுக்கு காட்சி கொடுத்து, குருவுபதேசம் செய்து வைத்தார். தொடர்ந்து சுவாமிகள் தவத்தினை மேற்கொண்டார். முப்பத்தைந்தாம் நாள் ” தவயோகத்தில் இருந்து எழுக” என்ற குரல் கேட்டது. என் இறைவன் முருகப்பெருமான் கட்டளை இட்டால் மட்டுமே தவத்தில் இருந்து எழுவேன் என்று உறுதியாகக் கூறினார். “இறைவன் முருகன் கட்டளைதான், எழுக” என்று மீண்டும் குரல் கேட்டது. மகிழ்ச்சி அடைந்த சுவாமிகள், தவக்குழியிலிருந்து எழுந்து, அக்குழியை மூன்று முறை வலம் வந்து, இறைவனுக்கு பல பூஜை முறைகளை செய்யத் தொடங்கினார். அன்று சித்திரை மாதம் பெளர்ணமி நாள் ஆகும். பாம்பன் சுவாமிகள் தனது தியான யோகத்தை நிறைவேற்றி, இறைவனை வழிபட்ட அந்நன்னாளே சிறப்பிற்குரிய நாளாக கருதப்பட்டு, இன்று வரை தொடர்ந்து கொண்டாடப் படுகிறது. மகான்களுக்கும், சித்தர்களுக்கும் சிறப்பிற்குரிய நாளாக ” சித்திரை மாதம், பெளர்ணமி நாள்” காலங்காலமாக கருதப்பட்டு கொண்டாடப்படுகிறது. அவ்வழக்கமே இன்று வரை தொடர்கிறது. (மேலும் ………..)

ஓம் குமரகுருதாசாய நமோ நமக

DSC00853 copy

0 replies

Leave a Reply

Want to join the discussion?
Feel free to contribute!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>